கோலாலம்பூர், ஜனவரி,31-
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இந்துப் பெருமக்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, இத்திருவிழா மலேசியா மடானி கொள்கைகளின் பிரதிபலிப்பாக விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, இவ்வாண்டு கலாச்சார பாரம்பரியத்துடன் நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் விதமாக, பினாங்கு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத ஊர்வலத்தையும் ஆலய நிகழ்வுகளையும் சிரமமின்றி துல்லியமாகக் கண்டு கழிக்க முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
அமைச்சரின் சொந்த நாடாளுமன்றத் தொகுதி சார்பில் பத்துமலையில், இலவச உணவு மற்றும் பானங்கள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை காலை பத்துமலைத் திருத்தலத்திற்கு நேரில் வருகை தரவுள்ள அமைச்சர் கோபிந்த் சிங், அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் மலேசியாவை உருவாக்குவதில் தனது அமைச்சு இலக்காக இருப்பதை உறுதிப்படுத்தினார். இந்தத் தைப்பூசம் அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் வழங்கட்டும் என வாழ்த்திய அவர், "வெற்றிவேல், வீரவேல்" என்ற முழக்கத்துடன் தனது தைப்பூச வாழ்த்துச் செய்தியை நிறைவுச் செய்துள்ளார்.








