கோலாலம்பூர், ஜனவரி.31-
பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஜனநாயகக் கட்டமைப்பை வலுப்படுத்த எடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும் என்று சட்டத் திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்துள்ளார்.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத்திருத்தங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும், பொதுமக்களின் பெரும்பான்மையான ஆதரவுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுப்பதற்கு முன்னதாக, அரசாங்கம் பொதுமக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தியது. இதில் பங்கேற்ற 3,722 பேரில், சுமார் 89.9 சதவீதத்தினர் பிரதமர் பதவிக்கு கால வரம்பு நிர்ணயிப்பதை ஒருமனதாக ஆதரித்துள்ளனர் என்று அவர் விளக்கினார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், அதிகாரக் குவிப்பைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முக்கிய சட்டத் திருத்தம், நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத் தொடரிலேயே சமர்ப்பிக்கப்படும் என்று அஸாலினா தெரிவித்தார்.








