கோலாலம்பூர், ஜனவரி.31-
அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட், பொருளாதார அடிப்படை மற்றும் அரசியல் நிலைத்தன்மை காரணமாக, அடுத்த வாரம் 3 ரிங்கிட் 93 சென் முதல் 3 ரிங்கிட் 96 சென் என்ற வலுவான வரம்பில் வர்த்தகம் செய்யப்படலாம் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதிக்குப் பிறகு, தெளிவான கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களால் ரிங்கிட் அதன் மிக உயர்ந்த நிலையைத் தொட்டுள்ளது.
இந்த அதிரடி முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வங்கியான பேங்க் நெகாராவின் ஆளுநர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரஷீத் காபூர், அரசின் தொடர்ச்சியான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் சாதகமான உலகளாவிய சூழலே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில் ரிங்கிட் மதிப்பு 4 ரிங்கிட் எனும் உளவியல் ரீதியான தடையைத் தாண்டி வலுவடைந்து வருவது, இறக்குமதிப் பொருட்களின் விலையைக் குறைப்பதோடு, நாட்டின் முதலீட்டுச் சூழலையும் மேம்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.








