கோலாலம்பூர், நவம்பர்.27-
மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்குப் பிரச்னை தற்போது கடுமையாகி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார். அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு நிலைமை மாறி வரும் நிலையில் இப்பிரச்னை உடனடியாக கையாளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கை மேன்மையுறச் செய்யவும், பள்ளிகளில் அவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் அரச மலேசியப் போலீஸ் படையும், கல்வி அமைச்சும் இணைந்து முக்கியப் பங்காற்றுவது அவசியமானதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிறார் மற்றும் பதின்ம வயதுடையவர்களின் முக்கியத்தளம் பள்ளியாகும். எனவே மாணவர்களை கட்டொழுங்குச் சீலர்களாக உருவாக்குவதற்கு நிறைய திட்டங்கள் பள்ளி அளவில் அமல்படுத்த வேண்டும் என்று டத்தோ ஃபாடில் இன்று பரிந்துரை செய்தார்.








