ஷா ஆலாம், டிசம்பர்.22-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் எஞ்சியிருக்கும் சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது தொடர்பில் நஜீப்பின் மகள் நூர்யானா நஜ்வா தனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வீட்டுக் காவல் அனுமதியைப் பெற்றுத் தர முடியாததற்காகத் தனது தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக நூர்யானா தெரிவித்தார்.
"உங்களுடைய தற்போதைய உணர்வுகளை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. தயவு செய்து மன உறுதியுடன் இருங்கள் அப்பா. வழக்கம் போல நாம் நமது போராட்டத்தைத் தொடருவோம்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நூர்யானா பதிவிட்டுள்ளார்.
இத்தருணத்தில் தமது தந்தை உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதே மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








