கோலாலம்பூர், ஜனவரி.06-
மலேசியாவில் மின்னணு சிகரெட்டான 'வேப்' பயன்பாட்டை முற்றாகத் தடை செய்வதற்கான இலக்கை சுகாதார அமைச்சு இவ்வாண்டு நிர்ணயித்துள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
வேப் தடையை உடனடியாக அமலுக்குக் கொண்டு வராமல் கட்டங் கட்டமாகச் செயல்படுத்தப்படும். முதல் கட்டமாக, திரவங்களை மீண்டும் நிரப்பக்கூடிய 'ஓபன் பாட்' (Open Pod) முறை வகையான வேப் கருவிகளுக்குத் தடை விதிக்கப்படவுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் அல்லது இவ்வாண்டு இறுதிக்குள் முழுமையான தடையை அமல்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். இதற்கான அமைச்சரவை குறிப்பாணை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
வேப் திரவங்களில் செயற்கை கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கலக்கப்படுவதால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள் மற்றும் Popcorn Lung போன்ற தீவிர நுரையீரல் நோய்களிலிருந்து இளைய தலைமுறையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் விளக்கம் அளித்தார்.








