தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை உடைக்கும் முயற்சியில் சதி வேலை நடந்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ளார். பொறாமைக் கொண்டவர்கள், மிக வஞ்சமான முறையில் நடப்பு ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மறைமுகவேலைகளை செய்து வருவதாக பிரதமர் அம்பலப்படுத்தினார்.எனினும் தமது ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கூட்டணிக் கட்சிகள் மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் இருப்பதால் நடப்பு அரசாங்கத்தை உடைப்பதற்கு மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கும் வஞ்சமிக்கவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று பிரதமர் விளக்கினார்.இந்நாட்டில் இதற்கு முன்பு அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தில் இது போன்ற ஒரு வலுவான அரசாங்கம் இருந்ததில்லை. இதனால் பொறாமைக் கொண்ட சிலர், அதன் வெற்றியை தகர்த்து எறிவதற்கு கொல்லைப் புற வழியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.எனினும் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.