ஈப்போ, ஜனவரி.24-
பேராக் மாநிலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளுக்கான தடை வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மாநிலச் சுற்றுசூழல் குழு ஆட்சிக் குழு உறுப்பினர் தே கோக் லிம் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற 'MS Plastics' நிலைத்தன்மை மையத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தடையின் கீழ் வணிக நிறுவனங்கள் நெகிழிப் பைகளை 20 காசுகளுக்கு விற்பனை செய்ய இனி அனுமதி இல்லை என்றும், தடையை மீறுபவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
வணிகர்கள் பைகளை விற்க விரும்பினால், அவை மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
நெகிழிப் பைகளுக்கு வசூலிக்கப்பட்ட 20 காசு கட்டணம் என்பது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தவிர, பணம் திரட்டுவதற்காக அல்ல. பேரங்காடிகள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இம்மாற்றத்திற்குத் தயாராக உள்ளன. இருப்பினும், நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்த பயனீட்டாளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுவது மிகவும் அவசியமாகும் என்று தே கோக் லிம் வலியுறுத்தினார்.








