Dec 18, 2025
Thisaigal NewsYouTube
மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி
தற்போதைய செய்திகள்

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? - கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.18-

கடந்த மாதம், மலாக்கா, டுரியான் துங்காலில், மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது, சட்டத்துறை அலுவலகத்தால் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்ட பிறகும் கூட, சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு கொலை வழக்கில், சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்துறை அலுவலகம், இவ்வழக்கை கொலை வழக்காக மறுவகைப்படுத்தி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் லிம் லிப் எங் தெரிவித்துள்ளார்.

மங்கோலிய மாடல் அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில், தண்டனை பெற்ற போலீஸ்காரர் ஒருவர், அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடியது போல், இவ்வழக்கிலும் அது போன்ற நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன்? யாராவது பின்புலமாக செயல்பட்டு அவர்களைப் பாதுகாக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள லிம், தேசிய போலீஸ் படைத் தலைவர் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த மூவரையும் சுடுவதற்கு யார் அனுமதி வழங்கினார்கள்? யாரெல்லாம் துப்பாக்கியைப் பிரயோகித்தார்கள் போன்ற உண்மைகள் மக்களுக்குத் தெரிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் நேற்று கருத்துத் தெரிவித்த, மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார், இவ்வழக்கு கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்ட போதிலும், தங்களுக்கு எந்த ஓர் அழுத்தமும் இல்லை என்றும், வழக்கம் போல தங்களது பணிகளைச் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் தாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ்... | Thisaigal News