மலேசிய வானொலி தொலைக்காட்சியான ஆர்.டி.எம். பெண் தயாரிப்பாளர் ஒருவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 44 வயதுடைய சுஹைலா முஹமாட் சைனி என்ற அந்த பெண் தயாரிப்பாளர், தான் சார்ந்துள்ள பணி தொடர்பில் தனிநபர் ஒருவரிடமிருந்து 18 ஆயிரம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி கோலாலம்பூர், Angkasapuri, வானொலி செய்திப் பிரிவில் துணை தலைமை இயக்குநர் அறையில் அந்த பெண் தயாரிப்பாளர் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 165 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.







