ஜோகூர் பாரு, செப்டம்பர்.07-
ஜோகூர் பாரு-ஆயர் ஹித்தாம் சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் கார் ஓட்டி வந்த 23 வயது இளைஞன் ஒருவன், சாலையில் போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருந்த காவற்படையினரை மோதித் தள்ளியுள்ளான். இந்த விபத்தில், 29 வயதான காவற்படை அதிகாரி ஒருவருக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என ஜோகூர் பாரு உத்தாரா மாவட்டக் காவற்படையின் தலைவர் உதவி ஆணையர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.
அதிவேகத்தில் வந்த Audi A6 கார் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த இரண்டு காவற்படையின் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தியுள்ளது. இந்த விபத்தை ஏற்படுத்திய இளைஞன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்திற்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என காவற்படையினர் எச்சரித்துள்ளனர்.








