புத்ராஜெயா, நவம்பர்.06-
சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே சம்மன்களுக்கு வரும் ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக தீர்வு காணும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வு காணத் தவறும் வாகனமோட்டிகள், ஜனவரி முதல் தேதியிலிருந்து கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவர் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நினைவுறுத்தினார்.
சாலை போக்குவரத்துக் குற்றங்களைப் புரிந்த வாகனமோட்டிகள் ஜேபிஜே-வின் சம்மன்களுக்கு விரைந்து தீர்வு காணுமாறு அவர் பரிந்துரைத்துள்ளார்.
நாடு முழுவதும் ஜேபிஜே- வின் 5.5 மில்லியன் சம்மன்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளன. சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் வரும் ஜனவரி முதல் தேதிக்கு முன்னதாக அவற்றுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். அவர்களின் பெயர் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
இவ்வாறு கருப்புப் பட்டியலில் இடம் பெறும் வாகனமோட்டிகள் தொடர்ந்து வாகனத்தைப் பயன்படுத்துதற்கு தடை விதிக்கப்படும் என்பதுடன் அவர்களின் வாகனமோட்டும் லைசென்ஸ் புதுப்பிக்கப்படாது என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.








