கோலாலம்பூர், ஜனவரி.20-
பத்துமலை தைப்பூசப் பெருவிழாவைக் காண வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு நற்செய்தியாக, மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின், கேடிஎம் ரயில் சேவைகள், இரண்டு நாட்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அறிவித்துள்ளார்.
கோலாலம்பூர், கேஎல் சென்ட்ரலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அந்தோணி லோக், இந்தச் சலுகை ஜனவரி 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை செல்லுபடியாகும் என்று தெரிவித்தார்.
Touch 'n Go அல்லது பிற வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி தானியங்கி வாயில்கள் முறையான ACG வழியாக பணிகள் இலவசமாகச் செல்லலாம். இந்த இலவசச் சேவை மூலம் சுமார் 450,000 முதல் 500,000 பயணிகள் பயனடைவார்கள் என கேடிஎம்பி எதிர்பார்ப்பதாக அந்தோணி லோக் விவரித்தார்.
கேடிஎம்பி சேவைகளுடன், ரெபிட்கேஎல் மூலமாகவும் இலவசப் பேருந்து சேவைகள் வழங்கப்படும். இந்தப் பேருந்துகள் பசார் செனி (Pasar Seni) மையம், கோம்பாக் LRT மற்றும் கம்போங் பத்து (Kg Batu) MRT நிலையங்களில் இருந்து பத்துமலைக்குச் செல்லும்.
இத்திட்டமானது போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
அதே வேளையில் தைப்பூசத் திருவிழா நடைபெறும் ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரையிலான நான்கு நாட்களுக்கும், கேடிஎம் கம்யூட்டர் ரயில்கள் 24 மணி நேரமும் தடையின்றி இயங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தைப்பூச விழாவிற்காக மொத்தம் 609 கம்யூட்டர் (Komuter) ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
• பத்துமலை - புலாவ் செபாங் (Batu Caves - Pulau Sebang) வழித் தடம்: 302 சேவைகள்.
• பத்துமலை – போர்ட் கிள்ளான் (Batu Caves - Port Klang) வழித்தடம்: 165 சேவைகள்.
• தஞ்சோங் மாலிம் - கேஎல் சென்ட்ரல் (Tanjong Malim - KL Sentral) வழித்தடம்: 142 சேவைகள்.
தவிர மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்ற விபரத்தையும் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பக்தர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டை விட 23 விழுக்காட்டிற்கும் அதிகமாக, மொத்தம் 216 கூடுதல் ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த இலவசச் சேவை மற்றும் கூடுதல் ரயில்கள் மூலம் சுமார் 7 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என கேடிஎம்பி எதிர்பார்க்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.








