Jul 15, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தான் வீட்டித் தீ விபத்து: மாற்றுத்திறனாளி முதியவர் மூச்சுத்திணறிப் பரிதாப உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

குவாந்தான் வீட்டித் தீ விபத்து: மாற்றுத்திறனாளி முதியவர் மூச்சுத்திணறிப் பரிதாப உயிரிழப்பு

Share:

பகாங், குவாந்தான், தாமான் ஸ்ரீ மஹ்கோத்தா ஜெயாவில் உள்ள மாடி வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், 60 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று காலை 9.30 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் ரஸாம் தாஜா ரஹீம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பாளர்கள், வீட்டின் முன்பக்க கதவையும் இரும்பு கிரில்லையும் உடைத்து உள்ளே நுழைந்தனர்.

வீட்டின் வரவேற்பறையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், அங்குள்ள ஒரு அறையின் படுக்கையில் ஜி. வைத்திலிங்கம் என்ற முதியவர் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்தவாறே கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் எவ்வித தீக்காயங்களும் இல்லை என்றும், அடர்ந்த புகையைச் சுவாசித்ததால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்தின்போது வீட்டில் தனியாக இருந்த அவர், தப்பிக்க முயன்றும் அடர்ந்த புகையினால் வெளியேற முடியாமல் போயிருக்கலாம் என நம்பப்படுகிறது. இத்தீ விபத்தில் வீட்டின் 15 விழுக்காடு பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தடயவியல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News