சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோவின் ஏற்பாட்டில், கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள 'லிண்டோங் 24 ஜாம்' எனும் சந்தாதாரர்களுக்கான புதிய 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் குறித்து, தமிழ், சீன நாளிதழ்கள் மற்றும் ஆன்லைன் ஊடக ஆசிரியர்களுக்கு இன்று சிறப்பு விளக்கவுரை வழங்கப்பட்டது.
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்-இல் உள்ள இண்டர்காண்டினென்டல் ஹோட்டல்-இல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெர்கேசோ நிறுவனம் கொண்டுள்ள கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் அதன் வியூக மற்றும் நிறுவனத் தொடர்புக்கான தலைமை நிர்வாகத் துணை அதிகாரி எட்மண்ட் சியோங் பெக் ஹுவாங் புள்ளிவிவரங்களுடன் விரிவான விளக்கங்களை அளித்தார்.
இத்திட்டம் பணியிடத்தில் ஏற்படும் விபத்துகள் மட்டுமின்றி, வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் வீட்டில் இருக்கும்போது ஏற்படும் வேலை சாராத விபத்துகளுக்கும் சந்தாதாரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவச் செலவு, தற்காலிக/நிரந்தரப் பணி இயலாமை நிதி உதவி போன்ற சிறந்த அனுகூலங்களை வழங்குகிறது என்பதை எட்மண்ட் சியோங் விவரித்தார்.
அதேவேளையில் இத்திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு வெளியே நடக்கும் விபத்துகள், நாள்பட்ட நோய்கள், மற்றும் சட்டவிரோதமான குற்றச் செயல்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்குச் சலுகைகள் பொருந்தாது என்பதையும் அவர் விளக்கினார்.
மேலும் பெர்கேசோவிடம் சமர்ப்பிக்கப்படும் இழப்பீட்டுக் கோரிக்கைகள் எவ்வாறு முறையாகப் பரிசீலிக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன, கடந்த காலங்களில் வழங்கப்பட்ட இழப்பீடுகளின் விபரங்கள் மற்றும் கோரிக்கைகளில் ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சட்டரீதியாக எடுக்கப்படும் வழக்கமான நடவடிக்கைகள் குறித்தும் அவர் மென்மையாக விவரித்தார்.
சுமார் 30 ஊடக ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், பெர்கேசோவின் தொடர்பு மற்றும் நிறுவன விவகாரப் பிரிவின் தலைமை அதிகாரி எஞ்சிக்கு ரோஷைமி மாட் ரோஸ்லி, பெர்கேசோவின் அனுகூலங்கள் பிரிவின் தலைமை அதிகாரி எஞ்சிக்கு முஸ்தபா டராமன், ஊடகப்பிரிவு அதிகாரி வி. குமார் வீரன் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.











