இன்று டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாவது நாளாக மலேசிய ஏர்லைன்ஸும், IndiGo வும் கோலாலம்பூர் - சென்னைக்கான தனது காலை விமானச் சேவையை ரத்து செய்துள்ள வேளையில் ஏர் ஆசியா விமானம் 6 மணி நேர தாமதத்திற்கு பிறகு கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்பட அட்டவணையிட்டுள்ளது.
மிச்சவுங் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று பெய்த கனமழையினால் சென்னை விமான நிலைத்தில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இன்று காலையில் சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியவில்லை. மேலும் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் இன்று காலை 9 மணி வரை மூடப்பட்டுள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 9.10 மணிக்கு கோலாலம்பூரிருந்து சென்னை புறப்பட வேண்டிய மலேசிய ஏர்லைன்ஸின் MH 182 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று இன்று காலை 6.05 மணிக்கு கோலாலம்பூரிருந்து சென்னை புறப்பட வேண்டிய IndiGo விமான நிறுவனத்திற்கு சொந்தமான 6E 1032 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
காலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய ஏர் ஆசியாவின் AK 11 விமானம், 6 மணி நேர தாமதத்திற்கு பின்னர் மதியம் 12 மணிக்கு புறப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது. எனினும் விமானப் புறப்பாடு உறுதி செய்யப்படவில்லை.
இன்றிரவு கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு புறப்படவிருக்கும் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், ஏர் ஆசியா விமானம், Batik AIR ( பாத்தேக் ஏர் ) திட்டமிடப்பட்டபடி புறப்படுவதற்கு அட்டவணையிடப்பட்டுள்ளன. ஆனால், இறுதி நேரத்தில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் பயணிகள் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.








