சிரம்பான், ஆகஸ்ட்.01-
16-வது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில், இஸ்தானா மெனாந்தி மற்றும் மாநிலச் செயலாளர் அலுவலகமான விஸ்மா நெகிரி ஆகிய முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தவுள்ளனர்.
இது குறித்து தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ காலிட் இஸ்மாயில் வெளியிட்டுள்ள தகவலில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சில தரப்பினர் அதிருப்தி காரணமாக குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கும் சாத்தியம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது ஒரு கட்சி வெற்றி, தோல்வி அடைந்தாலோ, சிலர் மற்றவர்களைத் தூண்டிவிட முயற்சிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவலையளிக்கும் இந்த விவகாரம் காரணமாக, விஸ்மா நெகிரி மற்றும் இஸ்தானா பெசார் ஶ்ரீ மெனாந்தி உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக ஒத்துழைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவ வேண்டும் என்றும் டான் ஶ்ரீ காலிட் இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்.








