மலேசியாவுக்குச் சுற்றுலா அழைத்து வந்து, 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரிங்கிட் வரை பணம் தருவதாகக் கூறி, போதைப்பொருளைக் கடத்த வைத்த 11 வெளிநாட்டவர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் கூறுகையில், இவர்களிடமிருந்து 671 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 418 கிலோகிராம் கஞ்சா மலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 3 கோடியே 34 லட்சம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்று ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஷாஸெலி காஹார் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை கேஎல்ஐஏ விமான நிலையம் மற்றும் சிப்பாங் பகுதிகளில் நடத்தப்பட்ட 10 சோதனைகளில் இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கைது செய்யப்பட்ட 11 வெளிநாட்டவர்களும் கிழக்காசியா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட வெளிநாட்டவர்கள், சமூக வருகை விசா அனுமதியில் மலேசியா வந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் ஒரு வாரம் சுற்றுலா மேற்கொண்ட பின்னர், குறிப்பிட்ட ஹோட்டல்களில் ஒப்படைக்கப்படும் பயணப் பெட்டிகளை எடுத்துச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருள் ஐரோப்பிய நாடுகளின் சந்தைக்குக் கொண்டு செல்லப்படவிருந்ததாக நம்பப்படும் நிலையில், இந்த வழக்குகளில் ஒன்பது வெவ்வேறு போதைப்பொருள் கும்பல்கள் தொடர்புப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 12 பேரில் ஆறு பேர் அபாயகர போதைப்பொருள் சட்டமான 39பி பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். மேலும் ஆறு பேர் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றனர் என்று ஷாஸெலி காஹார் விளக்கினார்.








