ஜார்ஜ்டவுன், நவம்பர்.21-
பினாங்கு மாநிலத்தில், கப்பல் பயண விரும்பிகளுக்காகவே, ஆடம்பர உணவு வசதிகள் மற்றும் கண்கவர் கடல் சுற்றுலாவுடன் கூடிய உல்லாசக் கப்பலான, ‘பினாங்கு இளவரசி’ தயாராகி வருகின்றது.
இத்திட்டமானது, பினாங்கின் கடல்சார் சுற்றுலாவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமையும் என்று பினாங்கு துறைமுக ஆணையமான பிபிசியின் தலைவர் டத்தோ யியோ சூன் ஹின் தெரிவித்துள்ளார்.
இது போன்ற ஆடம்பர உணவு வசதிகள் மற்றும் கடல் சுற்றுலாவுடன் கூடிய ஓர் உல்லாசக் கப்பலை, பினாங்கு மாநிலம் முதல் முறையாக அறிமுகப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், கப்பலில் நடைபெறும் திருமண வைபவங்கள், பெருநிறுவனக் கூட்டங்கள் மற்றும் கலாச்சார விழாக்களுக்கு இது ஒரு புதிய அடையாளமாக மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் வியாபாரிகளுக்கும், இக்கப்பலின் மூலம் புதிய வாய்ப்புகள் திறக்கப்படவுள்ளதாகவும் யியோ சூன் ஹின் குறிப்பிட்டுள்ளார்.








