அலோர் ஸ்டார், செப்டம்பர்.24-
இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது மனைவியையும், அவருடன் காணப்பட்ட கைப்பேசி வணிகர் ஒருவரையும் வெட்டிக் கொன்றதாக தனியார் துறை பணியாளர் ஒருவர், கெடா, குரூன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
30 வயது சையிட் அல் இக்பால் சையிட் ஷாருடின் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் அனிஸ் சுராயா அஹ்மாட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
அந்த நபர், கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு 9 மணியளவில் கெடா, யான் மாவட்டம், குவார் செம்பெடாக், தாமான் நோனாவில் ஒரு வீட்டின் முன்புறம் 28 வயதுடைய தனது மனைவியையும், 30 வயது ஆடவரையும் வெட்டிக் கொன்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








