மலாக்கா, ஜனவரி.14-
பாச்சாங் பகுதியிலுள்ள தங்கும் விடுதி ஒன்று, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உகந்ததாக அதன் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்ததையடுத்து, அங்கு விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அதன் உரிமத்தை இரத்து செய்துள்ளனர்.
நேற்று காலை 10.45 மணியளவில், 37 அறைகளைக் கொண்ட அந்த தங்கும் விடுதியில், ஹாங் துவா ஜெயா மாநகராட்சி மன்றம் அதிரடிச் சோதனை மேற்கொண்டதாக மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மாரிமான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு உகந்த தங்கும் விடுதியாகக் குறிப்பிட்டது ஏன்? என சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியின் உரிமையாளர் விளக்கமளிக்கும் வரையில், உரிமமானது இரத்து செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹாங் துவா ஜெயா மாநகராட்சி மன்றத்துடன் இணைந்து ஜாயிம் எனப்படும் மலாக்கா மாநில சமய இலாகாவும் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே, ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகளானது இஸ்லாமில் தடை செய்யப்பட்டுள்ளதோடு, நடைமுறைச் சட்டங்களுக்கும் முரணானது என்பதால் அதிலிருந்து விலகி இருக்குமாறு முஸ்லிம்களை ஜாயிம் அறிவுறுத்தியுள்ளது.








