போர்ட்டிக்சன், ஜூலை.20-
கூட்டணிக் கட்சிகளிடையே உறுதியானக் கோட்பாடு, ஒற்றுமை உணர்வு மற்றும் நாட்டை மேம்படுத்துவதற்கு அவை கொண்டுள்ள கூட்டுக் கடப்பாட்டின் காரணமாக தமது தலைமையிலான மடானி அரசாங்கம் வலிமையாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மடானி அரசாங்கத்தில் உள்ள ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் வெவ்வேறு சித்தாந்தத்தையும், நிலைப்பாட்டையும் கொண்டிருந்தாலும், அவற்றுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வின் மதிப்பு, பெருமைப்படத்தக்கதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு மடானி அரசாங்கத்தில் உள்ள உறுப்புக் கட்சிகளின் கூட்டு ஒத்துழைப்பும்,
கூட்டு மனப்பான்மையும் அசாதாரணமானதாகும் என்று பிரதமர் வர்ணித்தார்.
மடானி அரசாங்கம் வலிமையாக இருப்பது தொடர்பில் துணைப் பிரதமர்களான பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் மற்றும் சரவாக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் ஆகியோருக்கு இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று போர்ட்டிக்சன், கம்போங் பச்சிதானில் உக்குவா மடானி மற்றும் போர்ட்டிக்சன் மடானி அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தொடர்புடைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், துணைப் பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








