கோலாலம்பூர், அக்டோபர்.16-
16 வயது மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளியைச் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று பொதுமக்களை தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் கேட்டுக் கொண்டார்.
மாணவன் மற்றும் மாணவி சம்பந்தப்பட்ட இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியைப் பகிர்ந்து கொள்வது, சட்டத்தை மீறியச் செயல் என்பதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தும் என்று தியோ அறிவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட காணொளியைப் பகிர்வது 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும் என்று தகவல் மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி அறிவுறுத்தியிருப்பதையும் தியோ சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூர் நிர்வாணா மையத்தில் வைக்கப்பட்ட மாணவியின் நல்லுடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தியோ இதனைத் தெரிவித்தார்.
அதே வேளையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கும் தியோ தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.