கூலாய், ஜனவரி.17-
ஜோகூர், கூலாய் அருகே இன்று காலையில் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 64 வயது வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
ஜாலான் சீலோங், செனாய் புஸ்பகோம் அருகே இந்த விபத்து நடந்ததாக காலை 6.32 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டு கமாண்டர் முஹமட் நோர் ஸாக்கி முஹமட் அலி தெரிவித்தார்.
ஐந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழுவினர் 16 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வேனுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் பிரத்தியேக மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டனர்.
இதில் ஒரு ஆண் ஓட்டுநர் இறந்து விட்டதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். வேனில் இருந்த மற்ற ஐந்து பெண் பயணிகளுக்கு சொற்பக் காயம் ஏற்பட்டது என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பலியானவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காயமடைந்த ஐந்து பெண்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.








