ஷா ஆலாம், ஆகஸ்ட்.16-
மலேசியர்கள் போதுமான அளவு சேமிப்பைக் கொண்டிருக்காததற்கு, அவர்களுக்கு போதுமான ஊதியம் இல்லை. இது சரி செய்யப்பட வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் எம். பி சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு வருடத்திற்குள் 4.63 மில்லியன் மலேசியர்கள், தங்களின் இபிஃஎப்பின் நெகிழ்வான கணக்கிலிருந்து 14.79 பில்லியன் ரிங்கிட்டை மீட்டுள்ளனர் என்று நிதி அமைச்சு அறிக்கை கூறுகிறது.
அவசர நிலைகளுக்கான ஓர் அத்தியாவசிய நிரந்தர நிதியானது அழுத்தத்திலும், சிரமத்திலும் வாழும் குடும்பங்களுக்கு தற்போது உயிர்நாடியாக மாறியுள்ளதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
சந்தாதாரர்கள், இபிஃஎப்பிலிருந்து தங்கள் சேமிப்புப் பணத்தை மீட்டுக் கொள்வது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், மக்கள் பெரும் நெருக்கடியில் உள்ளனர் என்பதற்கான அறிகுறிதான் இதுவாகும் என்று சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
ஊதியங்கள் குறைவாக இருப்பதாலும், வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலும், மக்கள் முன்பு போல சேமிக்க முடியாததாலும் இபிஃஎப்பிலிருந்து தங்கள் பணத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இத்தகைய ஓர் அவசர நிலை, அவர்களின் வாழ்நாள் சேமிப்பைச் சன்னம், சன்னமாக அழித்து விடும் என்று சார்ல்ஸ் நினைவுறுத்துகிறார்.
உண்மையான ஊதிய வளர்ச்சி, வலுவான சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் கண்ணியத்துடன் வாழ அனுமதிக்கும் குறைந்தபட்ச பண இருப்பு, சந்தாதாரர்களின் கணக்கில் இலக்கு வைக்கப்பட்டு நிரப்பப்படுவது அவசியமாகும்.
இபிஃஎப் விழுக்காடுகளை மாற்ற முடியாது. நடப்பு பிரச்சினையை அதன் மையப் பகுதியிலிருந்து நாம் சரி செய்ய வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்துகிறார்.
மலேசியர்களுக்கு போதுமான அளவு சேமிக்க அவர்களுக்குப் போதுமான ஊதியம் வழங்கப்படவில்லை. இது சரி செய்யப்படும் வரை, பணி ஓய்வு பெறுவது என்பது ஒரு சிலருக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் ஓர் உத்தரவாதமாக இருக்காது என்று சார்ல்ஸ் வலியுறுத்துகிறார்.








