மெர்சிங், டிசம்பர்.21-
மெர்சிங், எண்டாவ் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் 19 ஆயிரத்து 300 ரிங்கிட் மதிப்பிலான நகைகளைத் திருடி விட்டுத் தப்பியோடிய இளம் ஜோடியை, ஜோகூர் பாருவில் வைத்துப் காவற்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த புதன்கிழமை நடந்த இந்தத் துணிச்சலான திருட்டு குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில நாட்களிலேயே, மெர்சிங் குற்றப்புலனாய்வுத் துறையினர் நடத்திய மின்னல் வேக வேட்டையில் 28 வயது ஆடவனும் 24 வயதுப் பெண்ணும் சிக்கினர் என மெர்சிங் மாவட்டக் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் அப்துல் ரஸாக் அப்துல்லா சானி தெரிவித்தார்.
வேலையில்லாத இந்த ஜோடியிடம் இருந்து திருடப்பட்ட நகைகளையும் அவர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய காரையும் மீட்டக் காவற்படையினர், அவர்கள் மீது ஏற்கனவே போதைப் பொருள் தொடர்பான குற்றப் பின்னணி இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். விசாரணைக்காக தற்போது 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்த ஜோடியிடம், திருட்டுத் தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால் ஜோகூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








