Jun 12, 2026
Thisaigal NewsYouTube
 ஜமால் யூனுஸின் வீட்டுப் பொருட்கள் ஜூன் 22ல் ஏலம்
தற்போதைய செய்திகள்

ஜமால் யூனுஸின் வீட்டுப் பொருட்கள் ஜூன் 22ல் ஏலம்

Share:

செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா கோக்கிற்கு வழங்க வேண்டிய 66 ஆயிரத்து 61 ரிங்கிட் 82 சென் வழக்குச் செலவுத் தொகையை வசூலிப்பதற்காக, சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் யூனுஸின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 14 வீட்டு உபயோகப் பொருட்கள் வரும் ஜூன் 22 அன்று ஏலம் விடப்படவுள்ளன.

இந்த ஏல நடவடிக்கைக்கு எதிராக ஜமாலின் மகன்கள் முகமது அமீன் டேனியல் மற்றும் முகமது ரசாலி காமின் ஆகியோர் தாக்கல் செய்திருந்த உரிமைக் கோரல் மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்ததை அடுத்து, ஏலத்திற்கான தடைகள் அனைத்தும் நீங்கியுள்ளதாகத் தெரசா கோக்கின் வழக்கறிஞர் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஏலம் ஜூன் 22 காலை 10 மணிக்கு நடைபெறும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், தெரசா கோக்கிற்கு 3 லட்சம் ரிங்கிட் இழப்பீடும், 50 ஆயிரம் ரிங்கிட் வழக்குச் செலவும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஜமால் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்திய போதிலும், வழக்குச் செலவுத் தொகையைச் செலுத்தத் தவறியதால், கடந்த ஜனவரி 28 அன்று அம்பாங் ஜெயாவிலுள்ள அவரது வீட்டிற்குள் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக நுழைந்து இந்த 14 பொருட்களைப் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News