கோத்தா திங்கி, ஜனவரி.25-
கோத்தா திங்கி, ஜாலான் சுங்கை கப்பால் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலக்கரி மண் தீ விபத்தினால் வெளியேறும் அடர் புகையிலிருந்து காக்க, தாமான் பாயு டாமாய் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் நான்கு ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ள இந்தக் காட்டுத் தீயை அணைக்க ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் தீவிரமாகப் போராடி வரும் வேளையில், இதுவரை 57 விழுக்காட்டுப் பகுதியில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசுவதால் தீ வேகமாகப் பரவுவதோடு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகை சூழ்ந்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனை தமது அலுவலகம் முழுமையாகக் கவனித்து வருவதாக தஞ்சோங் சுராட் சட்டமன்ற உறுப்பினர் அஸ்னான் தாமின் தெரிவித்தார். தற்போது நிலவும் வறண்ட வானிலையையும் பலத்த காற்றையும் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் திறந்தவெளியில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு மாநில அரசும் தீயணைப்புத் துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.








