அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ராக்கெட்டுகளை உற்பத்தி செய்யும் நாடாக மலேசியாவை மாற்றுவதும், அதனைத் தொடர்ந்து ஏவுகணை உற்பத்தித் துறையில் மேம்பாடு அடைவதும் அரசாங்கத்தின் இலக்காக இருப்பதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட்ஸ்டார் டிஃபென்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் ராக்கெட் டெக்னாலஜிஸ் இன்டர்நேஷனல் (ஆர்டிஐ) பிடிஒய் எல்டிடி நிறுவனங்களுக்கிடையேயான கூட்டு ஒப்பந்தம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றம், திறமையான மனிதவள மேம்பாடு மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுடனான ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது, குறிப்பாக ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத் துறையில் மலேசியாவின் தற்காப்பை வலுப்படுத்தும் தேசிய முயற்சியில் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளதாகவும் காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக சென்றுள்ள காலிட் நோர்டின், வெஸ்ட்ஸ்டார், ஆர்டிஐ ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் சாட்சியாகப் பங்கேற்றார்.
இந்த ஒப்பந்தத்தில் வெஸ்ட்ஸ்டார் குரூப் நிறுவனத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான சையத் அஸ்மான் சையத் இப்ராஹிம் மற்றும் ஆர்டிஐ நிறுவனத்தின் நிறுவனர் Allan James Payne ஆகியோர் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








