கோலாலம்பூரில் உள்ள ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் நேற்று மாலை மயக்கமடைந்த பயணி ஒருவர், தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவத்தையடுத்து, அம்பாங் மற்றும் ஸ்ரீ பெட்டாலிங் ரயில் வழித்தடங்களின் சேவையானது சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து நேற்று இரவு ரேபிட் கேஎல் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சம்பவம் மாலை 6.36 மணியளவில் ஹாங் துவா நிலையத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென மயக்கமடைந்த பயணி சமநிலையை இழந்து தண்டவாளத்தில் விழுந்ததாக நம்பப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துணை போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று முதலுதவி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, அப்பயணி பாதுகாப்பாக தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டு, நிலையத்தின் அவசர சிகிச்சை அறையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக Rapid KL தெரிவித்துள்ளது.








