Jul 16, 2026
Thisaigal NewsYouTube
2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்
தற்போதைய செய்திகள்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

Share:

கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான கூட்டரசு அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சபா மாநிலத்திற்கான திருத்தப்பட்ட சிறப்பு மானிய விகிதங்களுக்கு, அப்போதைய வாரிசான் தலைமையிலான சபா மாநில அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்ததாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அன்வார், கடந்த 2020 வரவு-செலவுத் திட்டத்தில் அப்போதைய நிதி அமைச்சர் மானிய விகிதங்களை முன்வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு தலா 53.4 மில்லியன் ரிங்கிட்டும், 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்கு தலா 80.1 மில்லியன் ரிங்கிட்டும், 2024 ஆண்டில் 106.8 மில்லியன் ரிங்கிட்டும், சிறப்பு மானியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தப்பட்ட மானிய விகிதங்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு, அக்டோபர் 16-ஆம் தேதி, நடைபெற்ற சபா அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்ததையும் அன்வார் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது குறித்து அன்வார் மேலும் கூறுகையில், கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி, சபா நிதி அமைச்சின் நிரந்தரச் செயலாளர் அனுப்பிய கடிதம் ஒன்றின் மூலம், கடந்த 2020 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கான சிறப்பு மானிய விகிதங்களை அப்போதைய சபா மாநில அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக கூட்டரசு அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டில், சபா மற்றும் சரவாக்கிற்கான சிறப்பு மானியத்தை கூட்டரசு அரசாங்கம் தலா 600 மில்லியனாக இரட்டிப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சபா மாநில அரசியலமைப்பின் கீழ் அதற்கு வழங்கப்பட வேண்டிய 40 விழுக்காடு வருவாய் உரிமை தொடர்பான கோரிக்கைக்கு இறுதி தீர்வு எட்டப்படும் வரை, சபாவுக்கான சிறப்பு மானியம் 600 மில்லியனிலிருந்து 1.5 பில்லியனாக உயர்த்தப்படும் என்று அன்வார் கடந்த மே மாதம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News