கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
நாடு 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை முன்னிட்டு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மாவின் தலா 100 ரிங்கிட் நிதி உதவியை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் மைகாட் வழி பயன்படுத்தத் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள பல்பொருள் கடைகள் மற்றும் பேரங்காடிகளில் மைகாட்டைப் பயன்படுத்தி மலேசியர்கள் 100 ரிங்கிட்டுக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்று தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
இந்த 100 ரிங்கிட் உதவித் தொகையைப் பெறுவதற்கு மலேசிய மக்களில் 2.2 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர். மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்து 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.








