நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தகர்களின் தொழில் ரீதியான முன்னேற்றத்திற்கும், வர்த்தக மேன்மைக்கும் அரசாங்கத்தின் உதவி திட்டங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று மாநில இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் தலைவர் திருநாவுக்கரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த வர்த்தகர்கள் பலர், தங்களின் தொழில் வளர்ச்சியிற்காக உரிய இலக்குடன் தொழிலில் கால்பதித்துள்ள வேளையில் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய அரசாங்கத்தின் உதவி திட்டங்கள், அவர்களின் தொழில் மேன்மைக்கு பெரிதும் உதவும் என்று திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

சிரம்பான், ரோயல் சுங்கை உஜூங் கெலாப்பில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக தொழிலியல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பு நிகழ்வில் தலைமையுரை ஆற்றுகையில் திருநாவுக்கரசு மேற்கண்டவாறு கூறினார்.

இந்த தீபாவளி விருந்து உபசரிப்பை தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய திருநாவுக்கரசு,துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, தொழில்முனைவர், கூட்டறவு மேம்பாட்டுத்துறை துணையமைச்சராக இருந்த போது இந்திய வணிகர்களின் உதவி திட்டங்கள் குறித்து பலர் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினார்.

தற்போது அதன் துணையமைச்சராக டத்தோ ஆர்.ரமணன் பொறுப்பு வகிப்பதால் நெகிரி செம்பிலான் இந்திய வணிகர்களுக்கான உதவித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசு தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

சிறப்புரை ஆற்றிய துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி திருநாவுக்கரசு தலைமையில் நெகிரி செம்பிலான் இந்திய வர்த்தக சம்மேளனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக புகழாரம் சூட்டினார்.
அதே வேளையில் தன்னை ஆளுமைப்படுத்திக் கொள்வதிலும் அரசாங்கத்தின் உதவிகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொழில் ரீதியில் முன்னேறவும் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் விவேகமாக செயல்படுவது அவசியமாகும் என்பதையும் சரஸ்வதி கந்தசாமி தமது உரையில் வலியுறுத்தினார்.









