மலாக்கா, ஜூலை.16-
பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு, அவர்களிடம் விற்பனை செய்வதற்குத் தருவிக்கப்பட்ட 351 விளையாட்டுத் துப்பாக்கிகளை மலாக்கா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மலாக்கா, தாமான் டெக்னோலோஜி செங்கில் உள்ள ஒரு வர்த்தகத் தளத்தில் நேற்று போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அசல் துப்பாக்கியைப் போல் காணப்படும் 351 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்தார்.
வட மாநிலத்திலிருந்து 20 முதல் 30 ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்ட ஒவ்வொரு துப்பாக்கியும் 300 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.
அதன் விலையை அடிப்படையாகக் கொண்டு ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 300 ரிங்கிட் பெறுமானமுள்ள விளையாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஸுல்கைரி விளக்கினார்.
இச்சோதனையின் போது பிளாஸ்டிக் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த வர்த்தகத் தளத்தின் பாதுகாவலர் என்று நம்பப்படும் 42 வயது நபரைப் போலீசார் கைது செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.








