ஷா ஆலாம், ஜூலை.16-
கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சோதனைகளில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் 4.13 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள ஹெரோயின் போதைப்பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை கிள்ளான் பள்ளத்தாக்கிலும், பினாங்கிலும் ஏக காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 47 க்கும் 55 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று நபர்கள் பிடிபட்டதாக ஹுசேன் ஒமார் குறிப்பிட்டடார்.
சுபாங் ஜெயா, ஜாலான் யுஎஸ்ஜே 19/4 இல், ஆடவர் ஒருவர் செலுத்திய மஸ்டா ரகக் கார் தடுக்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்ட போது 14.52 கிலோ எடை கொண்ட ஹெரோயின் பேஸ் போதைப்பொருளும், 920 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஶ்ரீ கெம்பாஙானில் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் இரண்டாவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டு 25.55 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்து.
மூன்றாவது சோதனை பினாங்கு, பெர்மாதாங் பாவோவில் ஓர் உணவகத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதில் மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டு, அவரின் வீட்டில் 7.46 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு 4.13 மில்லியன் ரிங்கிட்டாகும் என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.








