கோலாலம்பூர், ஜனவரி.10-
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் 19 வயது இளம் பெண் ஒருவரை மிரட்டி வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது வாலிபரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி இரவு, ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் பகுதியில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் ஒரு காரில் இருந்த போது, அங்கு வந்த சந்தேக நபர், அவர்கள் இருவரையும் அணுகியுள்ளார். அவர்கள் காரில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி மிரட்டிய அந்த நபர், அவர்கள் இருவரின் அடையாள அட்டைகளையும் வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் லாஸிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
அடையாள அட்டைகளைத் திரும்பத் தர வேண்டுமானால், தான் சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் என மிரட்டிய அந்த நபர், அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர், அந்தப் பெண் மற்றும் அவரது ஆண் நண்பரின் கைபேசிகளையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், நேற்று கோத்தா டாமன்சாரா பகுதியில் 24 வயதுடைய அந்தச் சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.
இது குறித்து மேலும் கருத்துரைத்த லாஸிம் இஸ்மாயில், கைது செய்யப்பட்ட நபர் வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் 392 பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.








