தொழிலாளர் சேமநிதி வாரியமான ஈபிஃப், தனது சந்தாதார்கள், ஆபத்து அவசர வேளைகளில் தங்களின் வாழ்நாள் சேமிப்புப்பணத்தை மீட்பதற்கு வகை செய்யும் மூன்றாவது கணக்கு அடுத்த ஆண்டு ஏப்ரலில் அமல்படுத்தப்படும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஈபிஃப் சந்தாதார்களுக்கு லாப ஈவு அறிவிக்கப்படும். அதன் பின்னர் சந்தாதாரர்களின் மூன்றாவது கணக்கு விவரம் தொடர்பான விரிவான தகவல்களை நிதி அமைச்சு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதற்கு முன்னதாக, பொது மக்கள், ஈபிஃப் - பின் மூன்றாவது கணக்கு தொடர்பாக தங்கள் கருத்துகளை நிதி அமைச்சுக்கு தெரிவிக்கலாம் என்று அஹ்மாட் மஸ்லான் குறிப்பிட்டார்.
பொருளாதார சுமையை எதிர்நோக்கியுள்ள ஈபிஃப் சந்தாதார்கள், 55 வயதுக்கு முன்னதாக குறிப்பிட்டத் தொகையை தங்களின் வாழ்நாள் சேமிப்பிலிருந்து மீட்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக மூன்றாவது கணக்குத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருக்கிறது.
இன்று ஆசியான் சமூகவில் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநர் வாரியக் கூட்டத்தையும், அதன் கருத்தரங்கையும் தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மூன்றாவது கணக்கு விவகாரத்தை அஹ்மாட் மஸ்லான் விளக்கினார்.








