மலாக்கா, டூரியான் துங்கல்லில் மூன்று இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மெலக்கா போலிஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆதாரங்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிடம் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி செம்பனை தோட்டத்தில் 29 வயதுடைய ஜி. லோகேஸ்வரன் , 21 வயதுடைய எம். புஷ்பநாதன் மற்றும் 24 வயது எம். புவனேஸ்வரன் ஆகியோர் போலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், போலிஸாரின் தற்காப்பு வாதத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இதனை ஏற்கனவே கொலை வழக்காக மறுவகைப்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பலியானவர்களின் உடமைகள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் முறையாகக் கையாளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டி, சமூக ஆர்வலர் அருண் துரைசாமி முன்னிலையில் குடும்பத்தினர் இந்த விரிவான ஊழல் தடுப்புப் புகாரை புத்ராஜாயாவில் சமர்ப்பித்துள்ளனர்.








