ஷா ஆலாம், அக்டோபர்.16-
பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் நான்காம் படிவ மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் இரண்டாம் படிவ மாணவனின் செயலுக்கு வீடியோ கேம் மற்றும் சமூக ஊடகங்களின் உள்ளடக்கங்கள் ஓர் உந்துதலாக இருந்துள்ளன என்று கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.
வீடியோ கேம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன் என்று நம்பப்படும் 14 வயது மாணவன், இத்தகையக் தாக்குதல் புரிவதற்குக் காரணமாக இருந்த சமூக ஊடக உள்ளடக்கங்களை இலக்காகக் கொண்டு தற்போது விசாரணை நகர்த்தப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி காஹார் தெரிவித்தார்.
அந்த மாணவன், இந்த கோரக் கொலையைப் புரிவதற்கு முன்னதாக ஒரு வீடியோ கேம்மைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அது எத்தகைய வீடியோ என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஷாஸெலி குறிப்பிட்டார்.
7 நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த மாணவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர் என்று விளக்கினார்.
இன்று கிள்ளானில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் நிருபர்களின் கேள்விக்கு அவர் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.








