Sep 25, 2026
Thisaigal NewsYouTube
செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன முதியவர்: தேடுதல் பணியில் களமிறங்கிய போலீஸ் மோப்ப நாய்கள்
தற்போதைய செய்திகள்

செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன முதியவர்: தேடுதல் பணியில் களமிறங்கிய போலீஸ் மோப்ப நாய்கள்

Share:

செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன 78 வயது முதியவரைத் தேடும் பணியில் ராபெல், டைசன் என்ற இரண்டு மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் பாலோங்கில் உள்ள செம்பனைத் தோட்டத்திற்குச் சென்ற அப்துல்லா அலியாஸ் என்ற முதியவர், அதன்பின் வீடு திரும்பாததைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட முதியவரின் மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் இந்தத் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்புப் படையினர், மலேசிய சிறப்பு உத்திசார் ஆபத்துக்கால மீட்புக்குழு (STORM), போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்தத் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வெண்மையான நிறமும், சுமார் 160 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த முதியவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தால் 06-457 2222 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைமை உதவி ஆணையர் நூர்ஹிஷாம் முஸ்தாபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News