ஒருங்கிணைந்த குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ராமேஸ் கும்பல் தலைவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவர் மீது அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காம்பங் சுங்கை டிவிஷன், கோலா மூடா ஆகிய பகுதிகளில் 2024 ஜனவரி முதல் 2025 டிசம்பர் 4ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் "ராமேஸ் கும்பல்" என்ற பெயரிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலில் உறுப்பினராக இருந்ததாக 37 வயதான ஜி. ரமேஷ் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130V(1)-ன் கீழ் இந்தக்குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நீதிபதி ஷர்மிலா அப்துல் சமத் முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டு வாசித்துக்காட்டப்பட்ட போது, அதனைப் புரிந்து கொண்டதாக ரமேஷ் தலையசைத்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துணை அரசு வழக்கறிஞர் வச்சிரா வோங் ரூய் பெர்ன் இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான வேளையில், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். சதீஷ் ஆஜரானார். முன்னதாக, இந்திய மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து, கடந்த மே 22ஆம் தேதி ஓப் தீகா நடவடிக்கையின் கீழ் இந்த கும்பலின் தலைவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சந்தேக நபர் பாங்காக்கில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த வான்வழிப் பயணத்தின் போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் இரு நாடுகளின் உதவியுடன் அவர் மீண்டும் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.








