நாடாளுமன்றத்தில் அவதூறாகவும் தகாத வகையிலும் பேசும் எம்.பி.க்களைத் தடுக்க, தற்போதுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று முன்னாள் பத்து காவான் எம்.பி. கஸ்தூரி பட்டு கூறியுள்ளார்.
அக்குழு அடிக்கடி கூடாததால், தவறு செய்யும் எம்.பி.க்கள் வெறுமனே மன்னிப்பு கோரி, தங்கள் கருத்தைத் திரும்பப் பெற்றுவிட்டு தப்பித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.
பெண் மற்றும் இளம் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பாலினப் பாகுபாடு மற்றும் தனிப்பட்ட அவமதிப்புகளை எதிர்கொள்வதாகவும் கஸ்தூரி கூறினார். தன்னை நிர்வாக ஊழியர் என தவறாக நினைத்த சம்பவங்களும், தனது உயரத்தை வைத்து கேலி செய்த சம்பவங்களும் நடந்ததாக அவர் தெரிவித்தார்.
“34 மில்லியன் மலேசியர்களின் சார்பில் பேசும் 222 எம்.பி.க்களில் நாங்களும் ஒருவர். எனது உயரத்தைப் பார்த்து கேலி செய்வது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.








