ஷா ஆலாம், நவம்பர்.27-
மாணவர் சமுதாயத்தில் நிலவி வரம் சமூகவியல் பிரச்னைகளைக் கையாளுவதற்குக் கடும் பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரம்படித் தண்டனை முறை கட்டம் கட்டமாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் பரிந்துரை செய்துள்ளார்.
பிரம்படித் தண்டனை முறை பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். குறைந்தபட்ச தண்டனை, பிரம்பின் அளவு, எத்தனை முறை விதிக்கப்பட வேண்டும் என பல கூறுகளை உள்ளடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர் சமுதாயத்தை மேம்படுத்தவும், சமூகவியல் பிரச்னைகளைக் கையாளவும், அவர்களை ஒழுக்கச் சீலர்களாக உருவாக்குவதற்கும் பிரம்படித் தண்டனை முறை சிறந்த அணுகுமுறையாகும் என்று டத்தோ ஷாஸெலி கஹார் பரிந்துரை செய்துள்ளார்.
இன்று ஷா ஆலாமில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையகத்தில் பெற்றோர்களுக்கான பகடிவதை எதிர்ப்பு பிரச்சார கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்ட போது டத்தோ ஷாஸெலி கஹார் இந்த யோசனையைத் தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தையும், ஒழுங்குமுறையையும் ஆசிரியர்கள் ஏற்படுத்துவதற்கு பிரம்படி முறை முக்கியப் பங்காற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பள்ளி வாழ்க்கையில் மாணவர்கள் கடந்து வரும் பாதையில்தான் பல்வேறு சீர்திருத்தங்களையும், ஒழுங்குமுறையையும் கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.








