பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.14-
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் இரண்டாம் படிவ மாணவன் ஒருவன், நான்காம் படிவ மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி, கொலை செய்த சம்பவத்திற்கு அந்த மாணவனுக்கும், உயிரிழந்த மாணவிக்கும் இடையில் காதல் இருந்ததாகக் கூறப்படும் கூற்றை போலீசார் மறுத்தனர்.
14 வயது மாணவனின் காதலை 16 வயது மாணவி நிராகரித்ததன் காரணமாகவே சம்பந்தப்பட்ட மாணவன், பள்ளிக்கு கத்தியுடன் வருகை தந்து, அந்த மாணவியைச் சரமாரியாகக் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாம்சுடின் மாமாட் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் இது. ஆனால், இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








