புத்ராஜெயா, ஆகஸ்ட்.06-
அரசாங்க ஊழியர்களின் கட்டாயப் பணி ஓய்வு வயது வரம்பை, 65 ஆக உயர்த்துவதற்கு முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை பொதுச் சேவை இலாகா ஆராயும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தேசப் பரிந்துரை குறித்து தீர்க்கமாக முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னதாக விரிவான ஆய்வு மேற்கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு எந்தவோர் ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும் அந்த பரிந்துரையின் உள்ளடக்கம் முழுமையாக ஆராயப்படும் என்று டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் பேராசிரியர் மரியானா ஃபிரான்செஸ்கா மஸ்ஸுகாத்தோவின் திறன் மற்றும் இயக்க வளர்ச்சி மீதான விரிவுரை நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டான் ஶ்ரீ ஷம்சூல் அஸ்ரி இதனைக் குறிப்பிட்டார்.








