தற்பொழுது பெங்ஙெராங்ஙில், வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாகக் குறிப்பிட்டு ஏஜென்சிகளால் எமாற்றப் பட்ட இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த விவரத்தை பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஓத்மான் செயிட் தமது X சமூக வலைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பெங்ஙெராங் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் தெரிவிக்கயில், நேற்று அப்பகுதியில் வேலை வாய்ப்பு மோசடியால் எமாற்றப்பட்ட வங்காள்தேசிகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதை ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, அவ்வாறானப் பதிவை தாம் பகிர்ந்ததாகக் கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சர் ஸ்தீவன் சிம் ஐத் தாம் தொடர்பு கொண்டு பேசியதாகவும் விசாரணை நடத்தப்பட்டு, வேலை உறுதிப்படுத்தப் படாமல் தொழிலாளிக்கான பெர்மிட்டுகளை வெளியிட்ட வேலை வாய்ப்பு ஏஜென்சிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர் முகவர்களால் ஏமாற்றப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் பிரச்சினையில் மனித உரிமை மீறல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த மீறல்கள் கடுமையானக் குற்றமாகக் கருதப்படுகிறது என அஸாலினா தெரிவித்தார்.
அதே சமயம், ஏமாற்றப்பட்ட வெளிநாட்டுவாசிகளுக்கு உடனடியாக உதவியை நல்கிய மனிதவள அமைச்சரின் இரக்க குணத்திற்குத் தாம் பாராட்டுவதாகவும் சொன்னார்.
நேற்று,பெங்ஙெராங்ஙில் 171 வங்காளாதேசிகளை காவல் துறை கைது செய்ததாக கோத்தா திங்கி காவல் துறைத் தலைவர் சுபெரிதென்டன் ஹுசின் சமோரா தெரிவித்தார்.
தாங்கள் வேலை வாய்ப்பு மோசடியில் ஏமாற்றப் பட்டதைக் குறிப்பிட்டு பாயூ டாமாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றதாக ஹுசின் சமோரா கூறினார்.
அவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் அல்ல. அவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரையில் எந்த வேலையும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.








