நாட்டில் சமூகப் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அத்துறைக்கான புதிய கவுன்சிலை உருவாக்கவும் வழிவகுக்கும் "சமூகவியல் பணித் தொழில்முறை மசோதா 2026" நாடாளுமன்ற மேலவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் , "மலேசிய சமூகவியல் பணித் தொழில்முறை கவுன்சிலை உள்ளடக்கியதாக இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அரசு, தனியார் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்ட வல்லுநர்கள் இடம்பெறுவர்" என்றார்.
இந்த கவுன்சிலுக்கு மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் பொதுச் செயலாளர் தலைவராகவும், சமூக நலத்துறை தலைமை இயக்குநர் துணைத் தலைவராகவும் செயல்படுவர். ஹாங் காங் போன்ற அனைத்துலக நாடுகளில் உள்ள கூட்டு முடிவெடுக்கும் உன்னத நடைமுறையைப் பின்பற்றி, மலேசியாவின் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இத்துறை இனி சட்டப்பூர்வமாக வலுவடையவுள்ளது என்று துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் விளக்கினார்.








