Apr 9, 2026
Thisaigal NewsYouTube
பத்துகேவ்ஸ் சிறார் இல்லப் பராமரிப்பாளர் மீது 15 பாலியல் குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

பத்துகேவ்ஸ் சிறார் இல்லப் பராமரிப்பாளர் மீது 15 பாலியல் குற்றச்சாட்டுகள்

Share:

பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங், பெர்மாத்தா, ஜாலான் பெர்மாத்தா பீருவில் உள்ள சிறார் இல்லப் பராமரிப்பு இல்லம் ஒன்றின் பராமாரிப்பாளர், இல்லத்தில் தங்கியிருந்த சிறார்களை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக இன்று அம்பாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த இல்லத்தில் பராமரிப்பாளராகப் பணியாற்றி வந்த 25 வயது வி. ரெத்னா என்பவர் 8 முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எதிராக 15 பாலியல் வன்கொடுமைகளை புரிந்ததாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் நீதிபதிகள் நூர்ஷிலா கமாருதீன் மற்றும் ஹோ குவாங் சின் ஆகியோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட ரெத்னா, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட போது அவற்றை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து ரெத்னாவிற்கு ஜாமீன் அனுமதி மறுக்கப்பட்டதுடன், வரும் மே 21 ஆம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் ரெத்னா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அதேவேளையில் அந்த சிறார் இல்லத்தின் உரிமையாளரான 31 வயது எஸ். வேலன் என்ற நபருக்கு எதிராகவும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. தனது சிறார் பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த சிறார்களை பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வேலனுக்கு எதிராக நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டன .

எனினும் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வேலன் விசாரணை கோரினார். இதனை தொடர்ந்து அடுத்த விசாரணை தேதி முடிவு செய்யும் வரை அவரை 30 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

அதேவேளையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட எந்தவொரு சிறார்களுடனும் தொடர்பு கொள்ளக்கூடாது என்று வேலனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

முன்னதாக, ரெத்னாவும், வேலனும் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்கள் ஆத்திரமடைந்து அவர்களை நோக்கிச் சத்தமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து இருவரையும் நீதிமன்ற அறைக்குள் அழைத்துச் சென்றனர். அந்த சிறார் பராமரிப்பு இல்லத்தில் அதன் உரிமையாளரும், பராமரிப்பாளர்களும் சிறார்களுக்கு எதிராக பாலியல் கொடுமை புரிந்துள்ளனர் என்று அண்மையில் பெர்துபுஹான் கெபாங்கித்தான் தீகா தாங்கான் சிலாங்கூர் என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவர் மாரன் சுப்பையா அம்பலப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்களும் இது குறித்து போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த இல்லத்தை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இவ்வாண்டு மார்ச் 27-ஆம் தேதி வரை இந்த இல்லத்தில் இக்கொடூரச் செயல்கள் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News