ஜார்ஜ்டவுன், ஜனவரி.06
Gertak Sanggul அருகே தெலுக் பாயு, தஞ்சோங் அசாம் கடற்கரைப் பகுதிகளில் உலா வருபவர்கள், குறைந்த அலை ஏற்படும் சமயங்களில் சற்று கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பளுப்பு நிற திருக்கை மீன் உட்பட விஷத்தன்மை கொண்ட கடல்வாழ் உயிரினங்கள் அப்பகுதியில் கரை ஒதுங்குவதால் இந்த எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை, தஞ்சோங் அசாம் கடற்கரையில், பளுப்பு நிறத் திருக்கை மீன் ஒன்று 10 வயது சிறுவனைக் கடித்ததையடுத்து, அச்சிறுவன் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அச்சிறுவன் விரைவில் குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாக பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்ருல் மஹாதீர் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், வரும் மார்ச் மாதம் வரையில், இப்பகுதிகளில் குறைந்த அலையானது நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








