சிப்பாங், ஜூலை.29-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியாவிற்கு சியாமாங் வகையைச் சேர்ந்த குரங்குகளைக் கடத்துதற்கு முயற்சி செய்த 36 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கோலாலம்பூரிலிருந்து இந்தியா, ஹைதராபாத்திற்கு மலேசிய ஏர்லைன்ஸ் மூலம் நேற்று இரவு 9.10 மணிக்கு, பயணம் செய்யவிருந்த வேளையில் அவரின் பயணப் பெட்டிகளில் சியாமாங் வகையைச் சேர்ந்த குரங்கள் இருப்பதை மலேசிய எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
MH 0198 விமானத்தில் அந்த மலேசியப் பெண் பயணிப்பது உடனடியாகத் தடுக்கப்பட்டதுடன் அவர் கே.எல்.ஐ.ஏ. விமான நியைத்திலேயே கைது செய்யப்பட்டார்.
அவரின் இரு பயணப் பெட்டிகளில் 4 சியாமாங் வகை குரங்குகளும் இதர ஐந்து குரங்களும் இருந்ததாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மலேசிய எல்லைப் பாதுகாப்பு, கட்டுப்பாட்டு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
சட்டவிரோத விற்பனைக்காக அந்தப் பெண், குரங்குகளைக் கடத்தியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








